.

மக்கள் கழுத்தில் மின்வெட்டு! - காரணம் யார்?

கோடை வெளுத்து வாங்கும் முன்பே, தமிழகம் முழு​வதும் அனலைக் கொட்டி வருகிறது திடீர் மின் தடை. இரண்டரை ஆண்டுகளாகத் தப்பி இருந்த சென்னை, புற நகர்ப் பகுதிகளுக்கும் கடந்த வாரம் முதல் ஒரு மணி நேரம் மின் தடை. அரசின் இந்த அறிவிப்பைக் கண்டு, 'தேர்தல் வாக்குப் பதிவு வரை தடையில்லா மின்சாரம் தர முடிந்தது. இப்போது மட்டும் ஏன் முடியவில்லை?’ எனக் கோபப்படுகிறார்கள் மக்கள்மின்சாரப் பற்றாக்குறை திடீரென வந்துவிட​வில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில், எவ்வளவு மின்சாரம் தேவை, எவ்வளவு பற்றாக்குறை என்பதை, சட்டமன்றத்தில் அரசே விவரமாக எடுத்துக் கூறி இருக்கிறது. அதன்படி, 'கடந்த ஜனவரியில் 3,630, பிப்ரவரியில் 2,220, மார்ச்சில் 2,840, ஏப்ரலில் 1,960, மே மாதம் 1,680 மெகா வாட்ஸ் என மின்சாரப் பற்றாக்​குறை இருக்கும்’ என்று மதிப்பிட்டனர். 'முன்கூட்டியான இந்த மதிப்பீட்டைவிட, அதிகமான அளவில்தான் பற்றாக்குறை ஏற்படும் என்பதுதான் யதார்த்தம்’ என்று சொல்லும் மின்சாரப் பொறியாளர்கள், 'செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மின்சாரத் துறை சரியாக செய்யவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  
மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்ட 17-வது மின்சார சர்வேயின்படி... தமிழகத்தின் மின்சாரத் தேவை 2010-11-ம் ஆண்டுக்கு 12,860 மெகா வாட்ஸ், அடுத்த ஆண்டுக்கு 14,224 மெகா வாட்ஸ், 2012-13-ம் ஆண்டுக்கு 15,517 மெகா வாட்ஸ் ஆக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், அரசு புள்ளி​விவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 183 மெகா வாட்ஸ் மின்சாரம் மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டது!
'கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்த மின் உற்பத்தித் திட்டமும் தொடங்காததுதான் இதற்குக் காரணம்’ எனக் குற்றம் சாட்டுகிறது தி.மு.க. தரப்பு. ஆனால், இந்த ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடியும் தறுவாயிலும், முன்னேற்றம் இல்லை.
கல்பாக்கம் அணு மின் நிலைய விரிவாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்கம் ஆகிய மின் திட்டங்கள் மூலம் 1,400 மெகா வாட்ஸ் மின்சாரம் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இந்த நான்கு திட்டங்கள் வராததற்குக் காரணம், மத்திய அரசுத் தரப்புதான் என்பதுபோல, தமிழக அரசு கை காட்டுகிறது.
அதே சமயம், 'வரும் மே மாதம் வட சென்​னையில் அனல் மின் நிலைய விரிவாக்கம் 1 (600 மெ.வா), ஆகஸ்ட்டில் விரிவாக்கம் 2 (600 மெ.வா), மேட்டூரில் ஜூலையில் 600 மெகா வாட்ஸ் எனப் புதிய மின் நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கும் என 1,500 மெகா வாட்ஸ் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். பற்றாக்குறை ஏற்படாது’ என மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார். ஆனால், அதற்குரிய அறிகுறியே இல்லை!
இவை தவிர, 'தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் 1,500, பாரத மிகு மின் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600, தூத்துக்குடியில் என்.எல்.சி-யுடன் இணைந்து 1,000 மெகா வாட்ஸ் திறன்கொண்ட புதிய மின் நிலையங்கள் 2012-ம் ஆண்டில் தொடங்கப்படும். இதன் மூலம் பற்றாக்குறையே இல்லை என்றாகி, மற்ற மாநிலங்களுக்கு உபரியாக மின்சாரம் விநியோகம் செய்யும் அளவுக்கு நிலைமை மாறும்’ எனப் பெருமையோடு சொல்கிறது மின்சாரத் துறை.
முன்னாள் மின் துறை அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வுமான நத்தம் விஸ்வநாதன் நம்மிடம் பேசினார். ''கடந்த அம்மா ஆட்சியிலேயே, என்.எல்.சி. தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து, புதிய திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்தோம். தி.மு.க. ஆட்சி வந்ததும், அவற்றைக் கைவிட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2,031 மெகா வாட்ஸ் புதிதாக மின் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அம்மா புள்ளிவிவரங்​களுடன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் பிறகும் எங்கள் ஆட்சிதான் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என தி.மு.க. தவறாகச் சொல்கிறது.  இந்த ஆட்சியில் மின்சார நுகர்வோர்களுக்கு நாமம் போடுவதுபோல, 111 மெகா வாட்ஸ்தான் புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தியாகிறது. காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் சென்று விநியோகிக்க, உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாததால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்த முடியவில்லை. அரசின் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிவாயு கிடைப்பது இல்லை. ஆனால், தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குத் தாராளமாக எரிவாயு வழங்கப்படுகிறது. இதை மத்திய அரசிடம் கேட்டு வாங்க முடியவில்லை. போதுமான நிலக்கரியை முன்கூட்டியே வாங்கிவைப்பதிலும் பிரச்னைகள். ஏகப்பட்ட அளவில் தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில், 17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்!'' என்றார்.
மின் வாரியத் தலைவர் சி.பி. சிங்கிடம் கேட்டபோது, ''மின் வாரியத்திடம் உரிய நிலக்கரி இருப்பு உள்ளது. இந்த நிலைமையில், அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்துகொண்டு இருக்கிறோம். கடந்த வார மழையால் விவசாய மின் பயன்பாடு தேவை இல்லாமல் போனது. மே மாதக் காற்று முன்கூட்டியே வரும்போல இருக்கிறது. காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைத்தால், பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்!'' என்கிறார் இன்னமும், நம்பிக்கையோடு.
ஆனால் மக்கள் அவஸ்தையில்தான் இருக்கிறார்கள்!

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..