.

கேரளாவிலும் போட்டி போட்டு இலவச அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு, இலவச திட்டங்களை அறிவித்துள்ளன. பொதுமக்களுக்கு உணவு பொருளை இலவசமாக வழங்க வேண்டும் அல்லது குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதில், எல்லா மாநில அரசியல் கட்சிகளும் உறுதியாக உள்ளன.

தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு, 1 கிலோ அரிசி வழங்கப்பட்ட திட்டம், மற்ற மாநில அரசியல் கட்சிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. அதனால், தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில், "அரி(ர)சியல்' அறிவிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

இந்த இலவச அறிவிப்பு போட்டி, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் நடந்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணியும், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இடதுசாரி கூட்டணியின் சார்பில், "இரண்டு ரூபாய்க்கு, 1 கிலோ அரிசி திட்டம், எல்லா மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்; முதியோருக்கான ஓய்வூதியம், 400 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

அரசு பள்ளியில் படிக்கும் எல்லா மாணவ, மாணவியருக்கும் மதிய உணவு, சீருடை, பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்' என, பல இலவச திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இலவச அறிவிப்புகளை வாரி வழங்கியுள்ளது. மாநிலத்தில் வேலை இல்லாத, 36 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, ஒரு ரூபாய்க்கு, 1 கிலோ என, 25 கிலோ அரிசியும், மற்றவர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு, 1 கிலோ அரிசி என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன், விவசாய பணிகளுக்கு, 3 சதவீத வட்டிக்கு கடன் அளிக்கப்படும்; 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் கொடுக்கப்படும்; மாணவர்கள் கம்ப்யூட்டர், மோட்டர் பைக் வாங்கும் போது, வட்டி இல்லா கடன்; எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் என அறிவிப்புகள் அணிவகுக்கின்றன.

படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பெருமை பெற்ற கேரள மாநில வாக்காளர்கள், தேர்தலில் சிந்தித்து ஓட்டுப் போடுவார்களா அல்லது இலவசங்களின் அடிப்படையில் ஓட்டுப் போடுவார்களா என்பது, தேர்தல் முடிவின் போது தெரியவரும்.

No comments:

Post a Comment

இதையும் காணுங்கள்..